பள்ளிவாசல் வக்ப் சொத்துக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக ஒரு தெளிவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இக்கடிதத்தை எழுதுகிறோம். 

எமது பள்ளிவாசல் காணியில் தப்லீக் ஜமாஅத் மர்கஸ் அமைப்பதற்கான ஒரு இடத்தை பல வருடங்களக்கு முன்னர் அப்போதைய நிர்வாகம் கொடுத்துள்ளது. தற்பொழுது அதனை மேலும் விஸ்தரிப்பதற்காக பள்ளிக் காணியில் இடம் கேட்கின்றார்கள். 

வக்ப் சொத்தை முன்னர் கொடுத்ததற்கும் தற்போது மேலதிகமாக கேட்கும் இடத்தை கொடுப்பதற்கும் உள்ள மார்க்கத் தீர்ப்பு என்ன என்பதை தெளிவுபடுத்தி கூடிய சீக்கரம் எமக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்;மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 


எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ~ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!


“வக்ப்” என்பது நிலைத்திருந்து பயனளிக்கும் பொருட்டு செய்யப்படும் ஒரு தர்ம காரியமாகும். வக்ப் செய்யப்பட்ட ஒரு பொருளை விற்கவோ, வேறு யாருக்கேனும் இலவசமாகக் கொடுக்கவோ கூடாது என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த தீர்ப்பாகும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.

ஒரு தடவை உமர் ரழியல்லாஹ அன்ஹ அவர்கள் நபி ஸல்லல்லாஹ அலைஹிவஸல்லம் அவர்களிடம் யாரஸ~ லல்லாஹ் ஸல்லல்லாஹ அலைஹிவஸல்லம் இதுவரை எனக்குக் கிடைத்திராத மிகவும் பெறுமதியான சொத்தை கைபரில் பெற்றுக் கொண்டேன். அதை நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்கள்? எனக் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹ அலைஹிவஸல்லம் அவர்கள் நீங்கள் விரும்பினால் அது விற்கப்பட நன்கொடையாக வழங்கப்பட அனந்தரமாக்கப்பட முடியாத ஸதகாவாக வக்ப் செய்து விடுங்கள் என்று கூறினார்கள். உமர் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் அதை ஏழைகளுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமைகளுக்கும், போராளிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், விருந்தாளிகளுக்கும் வக்ப் செய்தார்கள். (நூல் : சஹீஹ் அல் புகாரி )2737)

أن عمر رضي الله عنه قال : يا رسول الله إني أصبت مالاً بخيبر لم أصب قط مالاً أنفس عندي منه ؛ فما تأمرني فيه ؟ قال إن شئت حبست أصلها وتصدقت بها , غير أنه لا يباع أصلها ولا يوهب ولا يورث فتصدق بها عمر في الفقراء وذوي القربى والرقاب وفي سبيل الله وابن السبيل والضيف....الحديث   (كتاب الشروط ، بَابُ الشُّرُوطِ فِي الوَقْفِ)

அவ்வாறே, ஒருவர் ஓர் இடத்தை அல்லது ஒரு பொருளை வக்ப் செய்யும் பொழுது, அவர் குறிப்பிடும் சகல நிபந்தனைகளும், எவ்வித மாற்றமும் இன்றி பின்பற்றப்பட வேண்டும் என்ற பொதுவான ஒரு விதி வக்பு சட்டங்கள் விடயத்தில் உள்ளது.
மேலும், வக்ப் செய்யப்பட்ட சொத்துகளை கண்காணிக்கக் கூடியவர்கள் வக்ப் செய்தவரது நிபந்தனைகளுக்கு முரணாகாத வகையில் அவற்றை நிருவகிக்க வேண்டும்.


மஸ்ஜிதுடைய தேவைகளுக்காக வக்ப் செய்யப்பட்ட காணியை அதன் நிர்வாகிகள் விரும்பினால் முஸ்லிம்களின் பொது நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும். எனினும் அது மஸ்ஜிதுடைய சொத்தாகவே பாதுகாக்கப்படவேண்டும் என்பதுடன்; மஸ்ஜிதுக்கு தேவைப்படும் பட்சத்தில் அதை மீளவும் பெற்றுக்கொள்ள முடியுமாக இருத்தல் வேண்டும்.


நீங்கள் உங்கள் கடிதத்தில் மஸ்ஜிதுடைய நலனுக்காக வக்ப் செய்யப்பட்ட காணியின் ஒரு பகுதியை முன்னைய நிர்வாகிகள் மர்கஸ் அமைப்பதற்காக கொடுத்துள்ளதாகவும் குறித்த அமைப்பினர் அதை விரிவுபடுத்துவதற்காக உங்களிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.


மஸ்ஜிதின் வக்ப் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு அதன் நிர்வாகிகளாகிய உங்களைச் சார்ந்ததாகும். எனவே, இலங்கை வக்ப் சபையின் ஆலோசனையுடன் மஸ்ஜிதுடைய செயற்பாடுகளுக்குத் தடையில்லாத வகையிலும் வக்ப் செய்தவரின் நிபந்தனைகளுக்கு முரணாகாத வகையிலும் குறித்த காணியின் ஒரு பகுதியை முஸ்லிம்களின் பொதுவான நலன்களுக்காகக் கொடுப்பதில் தவறில்லை.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறக்காத்துஹ~