நாம் எமது பள்ளி நிர்வாகத்தால் ஒரு சீட்டு பிடிக்க ஆலோசித்தோம். அதனுடைய முறை 10 பேர் சேர்ந்து ஒருவர் மாதம் 10000 ரூபாய் செலுத்த வேண்டும். முதல் சீட்டு மஸ்ஜிதுக்கு ஒதுக்கப்படும். இரண்டாவது சீட்டிலிருந்துதான் சீட் ஆரம்பமாகும். அதாவது மொத்தம் 11 சீட் கட்ட வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களுக்கு மாத்திரம்தான் சீட்டில் பங்குபற்றலாம். மார்க்கத்தில் இதனுடைய சட்டம் என்ன என்று தெளிவுபடுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

சீட்டுக் குலுக்கல் முறை என்பது, குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய ஒரு குழுவினர், நிர்ணயிக்கப்பட்ட ஒரு தொகைப் பணத்தை, தமக்கு மத்தியில் அறவிட்டு, குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்படுபவருக்கு தவணை அடிப்படையில் பணம் வழங்கும் ஒரு கூட்டான கடன் நடைமுறையாகும்.

இது பற்றி இமாம் கல்யூபி ரஹிமஹ{ல்லாஹ் அவர்கள் தனது “கன்ஸ{ர் ராகிபீன்” (كنزالراغبين) எனும் நூலின் விரிவுரையில் “அல்-இக்ராழ்” கடன் வழங்கல் எனும் பாடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

 “ஒரு பெண் தனது குழுவில் உள்ள மற்ற ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும் மாதாந்தம் அல்லது வாராந்தம் குறிப்பிட்ட தொகையை அறவிட்டு, அக்குழுவிலுள்ள ஒவ்வொருவருக்கும் (தவணைமுறையில்) வழங்கும், பெண்கள் மத்தியில் பிரபல்யமான ஜுமுஆ எனும் சீட்டு முறைமை அனுமதிக்கப்பட்டதாகும்.”

قال القليوبي رحمه الله في حاشيته على كنز الراغبين للإمام جلال الدين المحلي  فى باب الاقراض: الجمعة المشهورة بين النساء بأن تأخذ امرأة من واحدة من جماعة منهن قدراً معيناً في كل جمعة أو شهر ، وتدفعه لواحدة بعد واحدة إلى آخرهن جائزة ، كما قاله الولي العراقي.

உங்களது கடிதத்தில், நீங்கள் குறிப்பிட்டுள்ள சீட்டுக் குலுக்கல் முறையில், பத்து நபர்கள் இணைக்கப்பட்டு, பதினொரு தவணைகள் பத்தாயிரம் ரூபா வீதம் அறவிடப்படுகிறது எனவும், முதலாவது தவணையில் அறவிடப்படும் பணத் தொகையை, சீட்டில் பங்குபற்றும் அனைவருடைய மனவிருப்பத்துடனும் குறித்த மஸ்ஜிதுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே இச்;சீட்டு முறைமை நடைபெறுகின்றது எனவும், இந்நிபந்தனையை ஏற்றுக்கொள்பவர்களையே இச்சீட்டில் இணைத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இஸ்லாத்தின் பார்வiயில், சீட்டுக் குலுக்கல் முறை கடன் உடன்படிக்கையாகும். இக்கடன்; உடன்படிக்கையில், ஒரு புறம் தவணை முறையில் சிறு தொகையாக அறவிடப்பட்டு, மறு புறம் முழுத் தொகையையும் தவணை முறையில் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் திரும்பக் கையளிக்கப்படுகிறது.

இவ்வாறு கடன் உடன்படிக்கை செய்யும் பொழுது, கடனுடன் நேரடியாக சம்பந்தமில்லாத நிபந்தனைகள் இடுவது கூடாது. அவ்வாறு நிபந்தனை ஏதும் இடப்பட்டால் அந்நிபந்தனை செல்லுபடியற்றதாக ஆகிவிடும். மேலும், கடன் கொடுப்பவர் ஏதாவது வகையில் இலாபம் அடையவேண்டும் என்று நிபந்தனையிட்டால் அது வட்டி உடன்படிக்கையாக ஆகிவிடும்.

உங்களது சீட்டு முறையில், முதல் தவணையில் அறவிடப்படும் தொகையை மஸ்ஜிதுக்கு நன்கொடையாகக் கொடுத்தல் வேண்டும் என்று நிபந்தினையிடப்படுகிறது என்பதை உங்களது கேள்வியில் இருந்து விளங்கிக் கொண்டோம். அவ்வாறு நிபந்தனையிடுவது இஸ்லாத்தின் பார்வையில் செல்லுபடியற்றதாக ஆகிவிடும் என்பதால், சீட்டில் இணைபவர்கள் கட்டாயம் மஸ்ஜிதுக்கு நன்கொடை கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

எனவே, இதை இஸ்லாமிய சட்டதிற்கு அமைய செய்துகொள்வதற்கு, முதல் தவணையில் அறிவிடப்படும் தொகையை கட்டாயம் மஸ்ஜிதுக்கு நன்கொடையாகக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையிடாமல், விரும்பியவர்கள் மஸ்ஜிதுக்கு நன்கொடையாகக் கொடுக்கலாம் என்று கூறுவது ஏற்றமானது.

குறித்த சீட்டுக் குலுக்கல் முறையை மஸ்ஜிதின் வளாகத்தில் நடாத்துவதாயின், மஸ்ஜிதின் வெளிப்புறத்தில் நடாத்திக் கொள்வது நல்லது. மேலும், மஸ்ஜிதுக்கு வருமானம் பெறுவதற்கு இம்முறையில் முயற்சி செய்யாமல், சீட்டு அல்லாத வேறு அனுமதிக்கப்பட்ட முறைகளைக் கடைப்பிடிப்பது ஏற்றமானதாகும்.

இத்தீர்ப்பு உங்களது சீட்டு முறைமையை ஆராய்ந்து உங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டதாகும். தற்காலத்தில் பலவகையான சீட்டு முறைகள் இருப்பதனால் ஒவ்வொன்றையும் மார்க்க அறிஞர்களிடம் கேட்டுக்கொள்ளல் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்