பராஅத்துடன் சம்பந்தமான சில விடயங்கள்  

1.         அன்று நோற்கக் கூடிய நோன்பை பராஅத் நோன்பை நோற்கின்றேன் என்று நிய்யத்து வைப்பது சம்பந்தமாக.

2.         அன்றிரவு விசேடமாக செய்யப்படும் அமல்கள் சம்பந்தமாக.

3.         அன்று பராஅத் நோன்பு என்று மக்களின் நம்பிக்கை சம்பந்தமாக

எனவே, இது சம்பந்தமாக முழுமையான ஒரு தெளிவை நமது ஊர் உலமாக்களும் ஊர் வாசிகளும் ஜம்இய்யாவிடமிருந்து எதிர்பார்க்கின்றார்கள். அதற்கான பத்வாவை மிக அவசரமாக எமக்கு அனுப்பி வைக்குமாறு மிகப் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ரஜப் மற்றும் ரமழான் மாதங்களுக்கு இடைப்பட்டதுவே ஷஃபான் மாதமாகும். இம்மாதத்தின் சிறப்பைப் பற்றி நபி ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் பொழுது அமல்கள் இம்மாதத்தில் அல்லாஹு தஆலா விடம் உயர்த்தப்படுகின்றன என்று கூறியுள்ளார்கள்.

عن أسامة بن زيد رضيَ الله عنهما أنَّه سأل النَّبيَّ صَلَّى الله عليه وسَلَّم فقال: يا رسول الله، لم أركَ تصوم شهرًا منَ الشهور ما تصوم في شعبان، فقال صَلَّى الله عليه وسَلَّم:((ذلك شهر يغفل عنه الناس بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى الله تعالى فأحب أن يُرْفعَ عملي وأنا صائم )أخرجه النسائي في السنن، كتاب الصيام )

மேலும், ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். அதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஃபானில் முழு மாதமும் நோன்பு நோற்பார்கள்  என ஆயிஷா றழியல்லாஹ அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، حَدَّثَتْهُ قَالَتْ: لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ، فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ [ص:39] كُلَّهُ " رواه البخاري : 1970

இருப்பினும், இந்த மாதத்தின் ஆரம்ப 15 நாட்களில் நோன்பு நோற்காமல் கடைசி 15 நாட்களில் நோன்பு நோற்பது ஹராமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஷஃபான் மாதத்தின் அரைப்பகுதி எஞ்சியிருந்தால், நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம் எனக் கூறியதாக அபூ ஹரைரா றழியல்லாஹ அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ العَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا بَقِيَ نِصْفٌ مِنْ شَعْبَانَ فَلَا تَصُومُوا»: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ – 738

என்றாலும், ஷஃபான் மாதத்தின் ஆரம்ப 15 நாட்களில் சில நோன்புகளை நோற்றுவிட்டு, தொடர்ந்தும் 15க்குப் பின்னர் நோன்பு நோற்பது, வழமையாக திங்கள் மற்றும் வியாழன் நாட்களில் நோன்பு நோற்பவர் இம்மாதத்தின் கடைசி 15இல் உள்ள திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் நோன்பு நோற்றல், ஐயாமுல் பீழ் உடைய நாட்களில் நோன்பு நோற்பது, வாஜிபான நேர்ச்சை மற்றும் (கப்பாரா) குற்றப்பரிகாரத்திற்குரிய நோன்புகள் போன்றவற்றை ஷஃபான் உடைய கடைசி 15இல் நோற்பதற்கு அனுமதியுண்டு.

நீங்கள் வினவியருக்கும் ஷஃபான் மாதத்தின் 15ம் இரவைப் பொறுத்தவரையில் அவ்விரவு ஒரு சிறப்பான இரவாகும் என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

அல்லாஹ தஆலா தனது  படைப்பினங்களில்  கொலை செய்தவர் இன்னும் குரோதம் வைத்துக்  கொண்டிருப்பவர் ஆகிய  இரண்டு பேரையும் தவிர ஏனையோருக்கு ஷஃபான்  மாதத்தின்   15 ஆம் இரவன்று    பாவமன்னிப்பு   வழங்குகின்றான்   என நபி   ஸல்லல்லாஹு  அலைஹி  வஸல்லம்  அவர்கள்  கூறியதாக    அம்ருப்னுல் ஆஸ் றழியல்லாஹு அன்ஹ அவர்கள் அறிவிக்கின்றார்கள். இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறியுள்ளார்கள்.

عن عبد الله بن عمرو، أن رسول الله - صلي الله عليه وسلم - قال: "يطَّلعُ الله عَزَّ وَجَلَّ إلي خلقه ليلةَ النصف من شعبان، فيغفر لعباده، إلا لاثنين: مشاحنٍ، وقاتِلِ نفسٍ". رواه الإمام أحمد في "المسند" (6642)

இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து ஒவ்வொருவரும் தமக்கு பாவ மன்னிப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த இரவை தொழுகை, குர்ஆன் திலாவத், திக்ரு, துஆக்கள் இன்னும் ஹதீஸ்களில் வந்துள்ள அமல்கள் மூலம் உயிர்ப்பிப்பது சுன்னத்தாகும் என்று நான்கு மத்ஹபுகளுடைய இமாம்களும் கூறுகின்றனர்.

இமாம் ஷாபிஈ றஹிமஹு ல்லாஹ் அவர்கள் தனது “அல்உம்மு” எனும் நூலில், ஷஃபானுடைய  15 ஆம் இரவும் துஆக்கள் அங்கீகரிக்கப்படக்கூடிய இரவாகும் என்று கூறியுள்ளார்கள்.

وقال الشافعي رحمه الله: (بلغنا أنه كان يقال: إن الدعاء يستجاب في ليلة الجمعة، وليلة الأضحى، وليلة الفطر، وأول ليلة من رجب، وليلة النصف من شعبان، وبلغنا أن ابن عمر كان يحيي ليلةَ جمعٍ، وليلةُ جمع هي ليلة العيد لأن في صبحها النحر... ثم قال(أي الشافعيّ): وأنا أستحبُّ كل ما حكيت في هذه الليالي من غير أن يكون فرضا)

قال النوويُّ رحمه الله: (واستحبَّ الشافعيُّ والأصحابُ الإحياء المذكور مع أنَّ الحديث ضعيف لما سبق في أول الكتاب أن أحاديث الفضائل يتسامح فيها ويعمل على وفق ضعيفها)

ஹனபி மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு நுஜைம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ரமழானுடைய பத்து இரவுகள், இரண்டு பெருநாட்களுடைய இரவுகள், துல் ஹிஜ்ஜாவின் பத்து இரவுகள், ஷஃபானுடைய 15 ஆம் இரவு ஆகிய இரவுகளை அமல்களைக் கொண்டு உயிர்ப்பிப்பது சுன்னத்துகளில் உள்ளதாகும். (அல் பஹ்ருர் றாஇக்)

وقال ابن نجيم من الحنفية: "ومن المندوبات إحياء ليالي العشر من رمضان، وليلتي العيدين، وليالي عشر ذي الحجة، وليلة النصف من شعبان، كما وردت به الأحاديث" "البحر الرائق".

மேலும், மாலிக் மத்ஹபுடைய அறிஞர்கள் அந்த இரவுகளை (அதாவது ஷஃபான் நடுப்பகுதியின் இரவை) உயிர்ப்பிப்பது விரும்பத்தக்கதாகும் என்று கூறுகின்றனர். (அத் தாஜ் வல் இக்லீல்)

وجاء في "التاج والإكليل" (3/319) من كتب المالكية: "رغب في قيام تلك الليلة" [يعني منتصف شعبان].

ஹன்பலி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களும் இக்கருத்தையே கூறுகின்றனர். இப்னு தைமிய்யா றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ஷஃபான் 15 ஆம் இரவைப் பொறுத்தவரையில் அதனது சிறப்புகள் சம்பந்தமாக அதிகமான ஹதீஸ்களும், அறிவிப்புக்களும் வந்துள்ளன. ஸலபுகளில் ஒரு கூட்டம் இந்த இரவில் தொழக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரவில் மாத்திரம் ஒருவர் குறிப்பிட்டுத் தொழுவதற்கு ஸலபுகளின் முன்மாதிரியும், ஆதாரங்களும் இருக்கின்றன. இது போன்றவைகள் மறுக்கப்படமாட்டாது. (மஜ்மூஃ அல் பதாவா) 

 وهو مذهب الحنابلة أيضا، كما في "شرح منتهى الإرادات" للبهوتي، وقال ابن تيمية: "وأما ليلة النصف فقد روى في فضلها أحاديث وآثار، ونقل عن طائفة من السلف أنهم كانوا يصلون فيها، فصلاة الرجل فيها وحده قد تقدمه فيه سلف وله فيه حجة فلا ينكر مثل هذا" "مجموع الفتاوى"

ஆகவே, இவ்விரவில் தொழுகை, திலாவத்துல் குர்ஆன், திக்ர், துஆக்கள் இன்னும் ஹதீஸ்களில் வந்துள்ள, வழமையாகச் செய்துவரும் அமல்களைச் செய்யலாம். இவ்விரவிற்கென்று குறிப்பிட்ட விஷேட வணக்கம் ஒன்று கிடையாது.

இன்னும், 15ம் நாளில் நோன்பு நோற்பது பற்றி பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

அலி றழியல்லாஹு அன்ஹு  அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஷஃபான் மாதத்தின் அரைப்பகுதியின் இரவு வந்து விட்டால், அதன் இரவில் நின்று வணங்குங்கள், மேலும், அதன் பகல் பொழுதில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ தஆலா அன்று இரவு தனது அடியார்களைப் பார்த்து உங்களில் எவரும் என்னிடத்தில் பாவமன்னிப்பு கேட்கக் கூடியவர் இல்லையா? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன். ரிஸ்க்கை (வாழ்வாதாரத்தை) கேட்கக் கூடியவர் இல்லையா? நான் அவருக்கு அதை வழங்குகின்றேன். உங்களில் நோய்வாய்பட்டவர் இல்லையா? அவருக்கு ஆரோக்கியமளிக்கின்றேன் என்று பஜ்ர் வரைக்கும் கேட்கின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

حدثنا الْحَسَنُ بن عَلِيٍّ الْخَلَّالُ، ثنا عبد الرَّزَّاقِ أَنْبَأَنَا ابن أبي سَبْرَةَ عن إبراهيم بن مُحَمَّدٍ عن مُعَاوِيَةَ بن عبد اللَّهِ بن جَعْفَرٍ، عن أبيه عن عَلِيِّ بن أبي طَالِبٍ قال، قال رسول الله –صلى الله عليه وسلم-: (إذا كانت لَيْلَةُ النِّصْفِ من شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فإن اللَّهَ يَنْزِلُ فيها لِغُرُوبِ الشَّمْسِ إلى سَمَاءِ الدُّنْيَا فيقول: ألا من مُسْتَغْفِرٍ لي فَأَغْفِرَ له، ألا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ، ألا مبتلى فَأُعَافِيَهُ، ألا كَذَا ألا كَذَا حتى يَطْلُعَ الْفَجْرُ - سنن ابن ماجه

என்றாலும், இந்த ஹதீஸுடைய அறிவிப்பாளர் வரிசை மிகவும் பலவீனமானது என்று சில ஹதீஸ் கலை அறிஞர்களும், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் வரக்கூடிய அப்துர் ரஹ்மான் இப்னு அபீ சப்ரஹ் என்பவர் “இட்டுக் கட்டக் கூடியவர்” என்று மற்றும் சில அறிஞர்களும் கூறுகின்றனர்.

மேலும், ஸஹீஹு முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸில் ஷஃபான் மாதத்தில் நடுப்பகுதியில் உள்ள நாட்களில் நோன்பு பிடிக்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமூட்டியுள்ள விடயமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்ரான் பின் ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “என்னிடம்” அல்லது நான் செவியுற்று கொண்டிருக்க மற்றொரு மனிதரிடம்: “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் நடுப்பகுதியில் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். நான் “இல்லை" என்றேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்” நீர் (ரமழான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهُ: - أَوْ قَالَ لِرَجُلٍ وَهُوَ يَسْمَعُ - «يَا فُلَانُ، أَصُمْتَ مِنْ سُرَّةِ هَذَا الشَّهْرِ؟» قَالَ: لَا، قَالَ: «فَإِذَا أَفْطَرْتَ، فَصُمْ يَوْمَيْنِ» - رواه الإمام مسلم رحمه الله 

இந்த ஹதீஸுக்கு இமாம் நவவி றஹிமஹுமுல்லாஹ் அவர்கள் “இந்நாட்கள் நோன்பு நோற்பதற்கு சுன்னத்தான நாட்களான ஐயாமுல் பீழ் உடைய 13, 14, 15ம் நாட்கள்” என்று விளக்கம் கூறியுள்ளார்கள்.

فَكَأَنَّهُ يَقُولُ يُسْتَحَبُّ أَنْ تَكُونَ الْأَيَّامُ الثَّلَاثَةُ مِنْ سُرَّةِ الشَّهْرِ وَهِيَ وَسَطُهُ وَهَذَا مُتَّفَقٌ عَلَى اسْتِحْبَابِهِ وَهُوَ اسْتِحْبَابُ كَوْنِ الثَّلَاثَةِ هِيَ أَيَّامُ الْبِيضِ وَهِيَ الثَّالِثَ عَشَرَ وَالرَّابِعَ عَشَرَ وَالْخَامِسَ عَشَرَ (شرح النووي على مسلم)

இவ்வடிப்படையில், ஷஃபான் மாதம் 15ம் நாளில் விஷேடமாக நோன்பு நேற்பது பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் ஆதார பூர்வமான ஹதீஸாக இல்லாவிட்டாலும், அந்நாளில், மேற்குறிப்பிட்டதன் பிரகாரம், ஷஃபான் மாதத்தின் பொதுவான சுன்னத்தான நோன்பு என்ற அடிப்படையிலோ அல்லது 13,14,15 ஆகிய ஐயாமுல் பீழ் உடைய நாட்கள் என்ற அடிப்படையிலோ அல்லது வழமையாக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு நோற்பவர் என்ற அடிப்படையிலோ நோன்பு நோற்கலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்