எமது பிரதேசங்களில் வருமானம் தரும் உற்பத்திப் பொருட்களில் தேங்காய், உப்பு, பழச்செய்கை போன்றன முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஸகாத் விதியாகும் பொருட்களில் இவற்றையும் சேர்ப்பதா இல்லையா என்பதில் எமது பிரதேச உலமாக்கள் மத்தியில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

பொது மக்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உத்தியோகபூர்வ பத்வாவை வேண்டி நிற்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக கீழ்வரும் இரண்டு தலைப்புகளில் ஜம்இய்யாவின் பத்வாக்களை எழுத்து மூலம் நாம் எதிர்பார்க்கின்றோம்.

1.    நாம் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் ஸகாத் விதியாகுவது தொடர்பாக ஜம்இய்யாவின் தீர்ப்பு

 

2.    ஸகாத் விதியாகாதெனில் அப்பொருட்களின் மூலம் பெருமளவு பணம் சம்பாதிக்கும் செல்வந்தர்கள் தமது பணத்திற்காக ஸகாத்தைக் கணிக்கும் முறைமை பற்றிய தெளிவு

அல்லாஹு தஆலா எம்மனைவரினது நன்முயற்சிகளையும் தீன்பணிகளையும் கபூல் செய்து கொள்வானாக. ஆமீன்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஸகாத் விதியாகும் பொருட்களில் தானியங்களும் பழங்களும் அடங்கும். இதுபற்றி அல்லாஹு தஆலா பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற) வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்.'

'அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தை  (ஸக்காத்தைக்) கொடுத்து விடுங்கள்.'

மேற்கண்ட வசனங்களில் பொதுவாக பூமியிலிருந்து வெளியாகக் கூடியவைகளுக்கு ஸகாத் வழங்கும்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றில் எவ்வகையானவற்றிக்கு ஸகாத் வழங்க வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூ மூஸா அல்-அஷ்அரீ மற்றும் முஆத் இப்னு ஜபல் றழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவருக்கும் நீங்கள் கோதுமை, வாற்கோதுமை, திராட்சை மற்றும் ஈத்தம் பழம் ஆகிய நான்கு வகையிலிருந்தே தவிர ஸகாத்தை எடுக்க வேண்டாம் என்று கூறினார்கள். 

இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள நான்கு வகையிலும் ஸகாத் கொடுப்பது கடமை என்பது மார்;க்க அறிஞர்களின் இஜ்மாஃ ஆகும்.

எனினும், மேற்குறிப்பிட்ட நான்கு வகைகள் தவிர்ந்த ஏனைய விளைபொருட்களில் ஸகாத் கடமையாகும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது.

இமாம் அஹ்மத் றஹிமஹுல்லாஹ் அவர்கள் நிறுக்க முடியுமான, சேமித்து வைக்கக்கூடிய தானியங்கள் மற்றும் பழவகைகளுக்கு ஸகாத் கடமையாகும் என்று கூறுகின்றார்கள்.

இமாம் அபூ ஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்கள், பூமியில் விளையும் அனைத்திற்கும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். 

இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் மாலிக் றஹிமஹுமல்லாஹ் ஆகிய இருவரின் கருத்துப்படி, சேமித்து வைக்க முடியுமான, பிரதான உணவாக உட்கொள்ளக்கூடிய தானியங்களுக்கே ஸக்காத் கடமையாகும்.

அந்த வகையில் கோதுமை, சோளம், அரிசி மற்றும் சேமித்து வைக்க முடியுமான,  உணவாக உட்கொள்ளக்கூடிய தானியவகைகளிலும், பழவகைகளில், திராட்சை மற்றும் ஈத்தம் பழங்களிலும் ஸகாத் கடமையாகும்.

மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் பழவகைகளில் திராட்சை மற்றும் ஈத்தம் பழம் தவிர்ந்த ஏனையவற்றிலும், தானியங்களில் சேமித்து வைக்கமுடியாத, பிரதான உணவாக உட்கொள்ளப்படாத தானியங்களிலும் ஸகாத் கடமையாக மாட்டாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் நிலைப்பாடாகும். அந்த வகையில் மரக்கறி மற்றும் தேங்காய் போன்றவற்றில் ஸகாத் கடமையாகாது.

பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்துக்களுக்கு பின்வரும் ஹதீஸும் ஸஹாபாக்களின் கூற்றுக்களும் சான்றாக உள்ளன.

முஆத் இப்னு ஜபல் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், யமனிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்;களிடம் கடிதம் மூலம் மரக்கறிக்கு ஸகாத் கடமையாகுமா என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்;கள் அதில் கடமையாகாது என்று கூறினார்கள். (ஸுனன் அல்-திர்மிதி)  இந்த ஹதீஸுடைய அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும், இதுவே அதிகமான மார்க்க அறிஞர்களின் கருத்து என்று இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் குறிப்பிடுகின்றார்கள்.

உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'மரக்கறி வகைகளில் ஸகாத் கடமையில்லை' என்று கூறியுள்ளார்கள். இதே விடயம் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. (அல்-பத்ர் அல்-முனீர்)

மரக்கறி வகைகளில் ஸகாத் கடமையில்லை என்பது பற்றி வந்துள்ள ஹதீஸ்கள் துண்டிக்கப்பட்ட 'முர்ஸல்' வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் வித்தியாசமான பல அறிவிப்புத் தொடர்களில் வந்துள்ளதால் ஒன்றை ஒன்று உறுதிப்படுத்துகின்றது என்று இமாம் பைஹகி றஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள். 

எனவே, மேற்கூறப்பட்ட ஆதாரங்களையும் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் அடிப்படையாக வைத்து திராட்சை, ஈத்தம் பழம் தவிர்ந்த ஏனைய பழங்களிலும் மற்றும் தேங்காய் மரக்கறி வகைகள் போன்றவற்றிலும் ஸகாத் கடமையாகமாட்டாது. எனினும், ஸதகாவாக எவ்வளவும் கொடுக்கலாம்.

என்றாலும், இவை வியாபாரப் பொருட்களாக மாறி, நிபந்தனைகள் பூர்த்தியாகுமிடத்து ஸகாத் கொடுப்பது கடமையாகிவிடும். அதாவது, வியாபாரம் ஆரம்பித்து ஒரு சந்திர வருடம் பூர்த்தியாகும் நேரத்தில், அவ்வியாபாரத்தின் விற்பனைப் பொருட்கள், கையிருப்புப் பணம் மற்றும் வரவேண்டிய வியாபாரக் கடன்கள் போன்றவற்றின் மொத்தத் தொகை ஸகாத் கடமையாகும் ஆகக் குறைந்த அளவை (நிஸாபை) அடைந்திருந்தால்; ஸகாத் கொடுப்பது கடமையாகிவிடும். அவ்வியாபாரம் ஆரம்பிக்கப்படும் பொழுது அதன் முதலீடு ஸகாத் கடமையாகும் அளவை (நிஸாபை) விடக் குறைவாக இருந்தாலும் சரியே.

ஸக்காத் விதியாகும் ஆகக் குறைந்த அளவு (நிசாப்) 85 கிராம் தங்கம் அல்லது 595 கிராம் வெள்ளியின் பெறுமதியாகும். இலங்கை நாணயத்தில் 13.03.2018 ஆந் திகதி பெறுமதியின் பிரகாரம் ஸக்காத் விதியாகும் ஆகக் குறைந்த அளவு (நிசாப்) தங்கத்தின் பெறுமதியில் ரூபாய் 561,000 உம், வெள்ளியின் பெறுமதியில் ரூபாய் 49,176 உம் ஆகும்.

தங்கம் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் வித்தியாசப்டுவதனால் ஸகாத் கடமையாகுவதின் ஆகக் குறைந்த அளவின் பெறுமதியில் வித்தியாசம் ஏற்படலாம். ஒவ்வொரு சந்திர வருடமும் ஸகாத் கொடுக்கும் பொழுது தனக்கு ஸகாத் கடமையாகியுள்ளதா என்பதை அறிந்து கொள்ள குறிப்பிட்ட தினத்தின் தங்கம் வெள்ளியின் விலையை அறிந்து கொள்வது அவசியமாகும். ஏழைகளின் நலவுகளைக் கவனித்து வெள்ளியுடைய நிசாபை அடிப்படையாக வைத்து ஸக்காத்தை நிறைவேற்றிக்கொள்வது சிறந்தது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.