ஜமாஅத் தொழுகையில் முன்வரிசையில் நிற்கும் சிறுவர்களைப் பின்வரிசைக்கு அனுப்புதல்

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசைக்கு முந்திக் கொள்வதை இஸ்லாம் மிகவும் ஆர்வமூட்டியுள்ளது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்கள் அதான் சொல்வதிலும், ஜமாஅத் தொழுகையின் போது முன்வரிசையில் நின்று தொழுவதிலும் உள்ள சிறப்பை அறிவார்களானால், அதனை சீட்டுக் குலுக்கல் மூலம் தான் பெற்றுக் கொள்ள முடியும் என்றிருந்தாலும், அப்படியாவது பெற்றுக் கொள்ள முன்வருவார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 746)
பொதுவாக ஆண்கள் எந்தப் பாகுபாடும் இன்றி முதல் வரிசையில் நின்று தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. இருப்பினும் மார்க்க விளக்கம் உள்ளவர்கள் முன்வரிசையில் நிற்பது மிகச் சிறந்ததாகும்.

 'உங்களில் அறிவிற் சிறந்தவர்கள் எனக்கு அருகில் முன்வரிசையில் நிற்கட்டும். பிறகு (அறிவில்) அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூறினார்கள் என்று அபூ மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம் : 739)
இந்த ஹதீஸுக்கு இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்.
 
'மார்க்க விளக்கம் உள்ளவர்களை முன்வரிசைக்கு முற்படுத்துவதற்குக் காரணம், இமாமுக்கு தொழுகையில் ஏதேனும் மறதி ஏற்பட்டால், அவருக்கு அதனை உணர்த்தவும், இமாம்  தொழுகையை இடையில் முறித்து விட்டு வெளியேறிச் செல்லக்கூடிய சந்தர்ப்பத்தில் இமாமுக்குப் பகரமாக நின்று தொழுகை நடாத்துதல், தொழுகையின் செயல்முறைகளை நேரடியாக அவதானித்து அவற்றை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தல் போன்ற விடயங்களைச் செய்வதற்குமேயாகும். மேலும், மார்க்க விளக்கம் உள்ளவர்களை தொழுகையில் மாத்திரம் அன்றி அனைத்து மஜ்லிஸ்களிலும் முற்படுத்துவது சுன்னத்தாகும்.'

தொழுகையை நடாத்தும் இமாம்;, முதல் வரிசையில் மேற்குறித்த மார்க்க விளக்கம் உள்ளவர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் அவருக்குத் தொழுகையில் ஏதாவது ஏற்பட்டு தொழுகையை விட நேரிடும் போது தொழுகை நடாத்துவதற்காக இன்னும் ஒருவரை நியமிப்பதற்கு இலகுவாக இருக்கும்.

மஸ்ஜிதில் தொழுகைக்காக வயது வந்த ஆண்கள், சிறுவர்கள் (பருவ வயதை அடையாதவர்கள்) என அனைவரும் ஒரே நேரத்தில் சமுகமளித்திருந்தால், வயது வந்த ஆண்கள் முதலில் ஸப்புகளைப் பூர்த்தி செய்வதும், அதற்கடுத்து சிறுவர்கள் ஸப்புகளை நிறைவு செய்வதும் சுன்னத்தாகும்.

என்றாலும், சிறுவர்கள் முதல் வரிசைக்கு முந்திவிட்டால் அல்லது இகாமத் சொல்வதற்கு முன் முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்தால், அவர்களைப் பின் ஸப்புகளுக்கு அனுப்பி விட்டு பெரியவர்கள் முன் ஸப்புகளுக்குச் செல்வது கூடாது. இதனைப் பின்வரும் ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றது.

'உங்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டுப் பிறகு அந்த இடத்தில் அமரவேண்டாம்.' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (சஹீஹு முஸ்லிம் : 2177)

எனவே, ஜமாஅத் தொழுகைக்காக முன்வரிசையைப் பூர்த்தி செய்யும் போது மார்க்க விளக்கம் உள்ளவர்கள், வயது வந்தவர்கள், சிறார்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் சமுகமளித்திருப்பின் மேற்கூறப்பட்ட ஒழுங்கு முறைகளைப் பேணி வரிசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஜமாஅத் தொழுகை ஆரம்பமாகும் சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் முன்வரிசையில் முன்னதாகவே நின்று விட்டால் அவர்களைப் பின்னுள்ள வரிசைகளுக்கு அனுப்புவது கூடாது.  

என்றாலும், முதல் வரிசையில் நின்று தொழும் சிறார்கள் தொழுகையில் சேட்டை செய்து பின்வரிசையில் உள்ளவர்களது சிந்தனையைத் திருப்புபவர்களாக இருந்தால், அவர்களுக்கு அன்பாக உபேதசம் செய்து திருத்துதல் வேண்டும். அவ்வாறு உபதேசம் செய்தும், அவர்களது சேட்டை தொடருமென்றால் அவர்களைப் பின் வரிசைகளுக்கு அனுப்புவதில் தவறில்லை.

மேலும், தொழுகை, குத்பா, மற்றும் மார்க்க சபைகளில் அறிவில் உயர்ந்தவர்கள் ஏலவே சமுகமளித்து முன்வரிசைகளில் உட்கார்ந்திருப்பது சபையை அழகுபடுத்துவதுடன், சிறுவர்கள் முன்வரிசையில் உட்கார்ந்ததன் பின், மீண்டும் அவர்களை பின்வரிசைக்கு அனுப்புவதற்கான தேவையும் ஏற்படாதிருக்க உதவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.


வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு