உலகின் ஒரு பகுதியில் நோன்பை ஆரம்பித்த ஒருவர் இன்னொரு பகுதியில் இருபத்தெட்டாக அல்லது முப்பத்தொன்றாகப் பூர்த்தி செய்ய நேரிட்டால்...

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஓர் இடத்தில் உள்ள மக்கள் அனைவரும் நோன்பு நோற்கும்போது அவர்களுடன் சேர்ந்து ஒவ்வொருவரும் நோன்பு நோற்பதும், அவர்கள் நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடும் பொழுது, அவர்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடுவதும் அவசியமாகும் என்று முற்கால மற்றும் சமகால அறிஞர்கள் கூறியுள்ளனர். இதற்கு பின்வரும் ஹதீஸ் அடிப்படையாக உள்ளது.

'உங்களது நோன்பு நீங்கள் அனைவரும் நோன்பு நோற்கும் பொழுதாகும். நீங்கள் நோன்பை முடிப்பது நீங்கள் அனைவரும் நோன்பை முடிக்கும் பொழுதாகும். உங்களது ஈதுல் அழ்ஹாவுடைய பெருநாள் நீங்கள் அனைவரும் பெருநாள் கொண்டாடும் நாளாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். 

நூற்கள்: ஸுனன் அல்-திர்மிதி 697, ஸுனன் இப்னி மாஜஹ் - 1660, அல்-ஸுனன் அல்-குப்ரா 8010, ஸுனன் அபீ தாவூத்- 2324, ஸுனன் அல்-தாரகுத்னி - 2177)

பொதுவாகப் பிறை மாதங்கள் இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்களாகவே இருக்கும் என அப்துல்லாஹ் இப்னு உமர்  றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்' என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாற்கள் எனக் கூறிவிட்டு, பிறகு 'மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்' (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) - இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள்.   (நூற்கள்-ஸஹீஹுல் புகாரி - 5302, ஸஹீஹு முஸ்லிம் - 1080)

அதாவது, மாதம் என்பது சில வேளை முப்பது நாட்களாக அல்லது இருபத்தொன்பது நாட்களாக இருக்கும் என்று கூறினார்கள்.

இவ்வாதாரங்களை அடிப்படையாக வைத்து, மார்க்க அறிஞர்கள் பிறை மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களை விடக் குறையாது எனும் விடயத்தில் 'இஜ்மாஃ' கருத்தொற்றுமைப் பட்டுள்ளனர்.  மேலும், இருபத்தொன்பதாவது தினம்; மாலை பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

'நீங்கள் அதைப் (பிறையைப்) பார்த்தால் நோன்பை ஆரம்பித்துக் கொள்ளுங்கள். மேலும், அதைப் பார்த்தால் நோன்பை முடித்துவிடுங்கள். உங்களுக்கு அது மறைக்கப்பட்டால், ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.  (நூல் : ஸஹீஹுல் புகாரி-1907, ஸஹீஹு முஸ்லிம் -1081)

இவ்வடிப்படையில், ஒருவர் எப்பகுதிதியில் இருக்கின்றாரோ அப்பகுதியில் உள்ள மக்கள் நோன்பை ஆரம்பிக்கும் பொழுது, அவரும் நோன்பை ஆரம்பிப்பதும், அவர்கள் நோன்பை முடித்து பெருநாள் கொண்டாடும் போது அவரும் அவர்களுடன் பெருநாள் கொண்டாடுவதும் அவசியமாகும்.

மேலும், ஒருவர் ஒரு பகுதியில் அப்பகுதி மக்களுடன்; நோன்பை ஆரம்பித்து, பின்பு இன்னும் ஒரு பகுதிக்குச் சென்று, அங்கு பெருநாள் வரை தங்கியிருந்தால், அவர்கள் ரமழானை முடித்துப் பெருநாளைக் கொண்டாடும் தினத்திலேயே அவரும் பெருநாளைக் கொண்டாடுவார். இரு பகுதிகளிலும் ரமழான் வேறுபட்ட தினங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் சரியே.

அவ்வாறு குறித்த நபர் ரமழானை முடிக்கும் போது முப்பத்தொரு நாட்கள் நோன்பு நோற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அப்பகுதி மக்களுடன் அவர் அவரது முப்பத்தொராவது நோன்பையும் நோற்று அவர்கள் பெருநாள் கொண்டாடும் போது அவரும் பெருநாள் கொண்டாடுவார்.

அதேபோன்று, அம்மக்கள் பெருநாள் கொண்டாடும் பொழுது குறித்த நபர் இருபத்தெட்டு நோன்பை முடித்திருந்தால் அம்மக்களுடன் பெருநாளைக் கொண்டாடிவிட்டு பிறிதொரு நாளில் ஒரு நோன்பைக் கழா செய்து கொள்வார். ஏனெனில் ஒரு மாதம் குறைந்தது இருபத்தொன்பது நாட்களாகவே இருக்கும் என்பது மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து தெளிவாகின்றது.

அவ்வாறே, ஒரு பகுதியில், றமழான் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டு அல்லது ஷஃபான் மாதத்தை முப்பதாகப் பூர்த்;தி செய்து, றமழான் மாதத்தின் நோன்பை ஆரம்பித்ததன் பின்னர், இருபத்தெட்டாவது நாளில் தலைப் பிறை தென்படுவதற்கான வாய்ப்புகள் இருந்து, உறுதியான சாட்சிகள் மூலம் பிறை தென்பட்ட விடயம் நிரூபிக்கப்பட்டால் இருபத்;தொன்பதாவது நாளில் பெருநாள் கொண்டாடிவிட்டு பிறிதொரு நாளில் ஒரு நோன்பைக் கழா செய்வதும் அவசியமாகும்.

இவ்வாறான ஒரு நிகழ்வு அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் நடைபெற்று, அவர்கள் மக்களை ஒரு நோன்பைக் கழா செய்துகொள்ளுமாறு ஏவினார்கள் என்ற விடயம் ஸுனன் அல்-பைஹகி மற்றும் முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக் போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

அவ்வாறே ஸஊதி அரேபியாவிலும் ஹிஜ்ரி 1404 ஆம் ஆண்டு மேக மூட்டம் காரணமாக ஷஃபானை முப்பதாகப் பூர்த்தி செய்;து றமழானை அந்நாட்டு மக்கள் ஆரம்பித்தனர். என்றாலும், இருபத்தெட்டாவது தினம் பிறை தென்பட்டதாக நிரூபிக்கப்பட்டதால் பிறிதொரு நாளில் நோன்பைக் களா செய்வது அவசியம் என்று ஸஊதி அரேபியாவின் ஆய்வுக்கும் பத்வாவுக்குமான நிரந்தர அமைப்பு பத்வா வழங்கியது. 

எனவே, றமழானுடைய மாதம் ஏனைய பிறை மாதங்களைப் போன்று இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்களாகவே இருக்கும். அவ்வாறு இருபத்தெட்டாவது தினம் ஷவ்வால் பிறை தென்பட்டது நிரூபிக்கப்பட்டால், பெருநாள் கொண்டாடிவிட்டு இன்னும் ஒரு நாளில் ஒரு நோன்பைக் கழா செய்து கொள்வது அவசியமாகும்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் பற்றிய தெளிவுகள் அனைத்தும் பல இஸ்லாமிய சட்ட நூற்களில் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஷாபிஈ மத்ஹபின், மின்ஹாஜுத் தாலிபீன ;  மற்றும் அதனுடைய விரிவுரை நூற்கள், இமாம் மாலிக்  றஹிமஹுல்லாஹ் மற்றும், ஹனபி மத்ஹபுடைய ரத்துல் முஹ்தார் , மற்றும் ஹனபி மத்;ஹபின் தற்;கால பத்வா நூற்கலான "அஹ்சனுல் பதாவா" , "பதாவா றஹீமிய்யா" போன்ற நூற்களின் ஆசிரியர்கள், ஜோர்தான் நாட்டு உத்தியோக பூர்வ பத்வா நிலையம் , சமீப கால அறிஞர்களான அஷ்-ஷைக் இப்னு பாஸ், மற்றும் அஷ்-ஷைக் இப்னு உஸைமீன்  போன்ற இன்னும் பலர் இக்கருத்தைக் கூறியுள்ளனர்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.