முஸ்லிம் அல்லாதவர்களை மஸ்ஜிதிற்குள் அனுமதிப்பது பற்றிய மார்க்கத் தெளிவு

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு

முஸ்லிம் அல்லாதவர்களை மஸ்ஜிதிற்குள் அனுமதிப்பது பற்றிய மார்க்கத் தெளிவு

மஸ்ஜித் என்ற அரபுப் பதத்தின் பொருள்; சிரம் சாய்க்கும் (ஸுஜூத் செய்யும்) இடம் என்பதாகும். அல்லாஹ்வை சிரம் சாய்த்து வணங்குவது (ஸுஜுத் செய்வது) மஸ்ஜிதில் நடைபெறும் பிரதான வணக்கமாகும்.

மஸ்ஜித்கள் பற்றி அல்லாஹு தஆலா கூறும் போது 'மஸ்ஜித்கள் அல்லாஹ்வுக்கென்று நிர்மாணிக்கப்பட்டவைகளாகும். அதில்; அல்லாஹ் அல்லாத எதையும் அழைக்க வேண்டாம்' என்று கூறுகின்றான். (72:18)

மேலும், அல்லாஹு தஆலா திருமறையில் 'இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்பட வேண்டும் என்றும், அவற்றின் கண்ணியம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் முஸ்லிம்கள் அவனைத் துதி செய்து கொண்டிருப்பார்கள்'; என்று கூறுகிறான். (24:36)

'மஸ்ஜித்கள் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும், தொழுவதற்கும், குர்ஆன் ஓதுவதற்கும் உரியதாகும்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். (நூல் : சஹீஹுல் புகாரி)

அல்லாஹ்வின் இல்லமான மஸ்ஜித் கண்ணியமான இடமாகும். அது முஸ்லிம் சமூகத்தின் சமய, சமூக, கலாசார, ஆன்மீக, மற்றும் கல்விசார் செயற்பாடுகளின் முன்னேற்றத்திற்கு உதவுதல் போன்ற விடயங்கள் நடைபெறும் இடமாகும். எனவே, அதன் புனிதத்துவத்தைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் அதற்கான ஒழுங்கு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை யாரும் அறிவர்.

அவற்றில், மஸ்ஜிதிற்குள் நுழையும் ஆண், பெண் இருபாலாரும் ஒழுக்கமான ஆடையை அணிந்திருத்தல், வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல், சப்தத்தைத் தாழ்த்தல், இஃதிகாப் நிய்யத்துடன் வீற்றிருத்தல் துர்வாடையின்றி மணமாக இருத்தல், ஜனாபத் உடைய சந்தர்ப்பங்களில் மஸ்ஜிதில் தரிக்காதிருத்தல் என்பவை முக்கியமானவையாகும்.

எமது நாட்டில் உள்ள மஸ்ஜித்களில் நடைமுறையில் இருப்பது போன்று, முஸ்லிம் பெண்கள் மஸ்ஜிதிற்குள் நுழைவதாயின் அவர்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களைப் பயன்படுத்துவதோடு, அவர்கள் மாதவிடாய், பிரசவ ருது போன்றவற்றிலிருந்து சுத்தமாக இருப்பதும் அவசியமாகும்.

மேலும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூறுவதும், இஸ்லாத்தைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதும் முஸ்லிம்களது கடமையாகும். நாம் இஸ்லாம் கூறும் பிரகாரம் வாழத் தவறியதும், அதைப் பிறருக்கு முறையாக எட்டச் செய்யாமையும்; அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய பல சந்தேகங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களாகும்.

மேலும், 'ஒவ்வொருவரையும் அவரது அந்தஸ்திற்கேற்ப கண்ணியப்படுத்துங்கள்' (ஸஹீஹு முஸ்லிமின் முன்னுரை) என்ற நபி மொழிக்கேற்ப, முஸ்லிம் அல்லாதவர்களை அழைத்து இஸ்லாத்தை எடுத்துக் கூறும் போது, சமயத் தலைவர்கள்; உட்பட முக்கியஸ்தர்கள் அனைவரையும் அவர்களது அந்தஸ்திற்கேற்ப கௌரவிப்பது மர்க்கத்தில் உள்ள ஒரு விடயமாகும்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவை ஏற்படுத்துவதற்காக வசதியுள்ளவர்கள் தமது வீடுகளைப் பயன்படுத்த முடியும். முஸ்லிம் பாடசாலைகளையும், மத்ரஸாக்களையும் அல்லது பொதுவான மண்டபங்களையும் இதற்காகப் பயன்படுத்த முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் சபா மலைக்கு அருகாமையில் தமது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து இஸ்லாத்தை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மேலும், முஸ்லிம் அல்லாதவர்கள் மஸ்ஜிதில் நுழைவதற்கான தேவையிருந்தால் அவர்களை அனுமதியளிக்கும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மஸ்ஜிதுல் ஹராம் தவிர்ந்த ஏனைய மஸ்ஜித்களுக்கு, அவற்றில் பேணவேண்டிய ஓழுங்குகளுடன் நுழைய அனுமதிக்கலாம் என்று ஷாபிஈ மத்ஹபுடைய அறிஞர்கள் கூறுகின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுமாமா இப்னு உஸால், ழிமாம் இப்னு ஸஃலபா போன்ற சில தனிப்பட்ட நபர்களுக்கு மஸ்ஜிதிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். அதேபோன்று சில குழுக்களுக்கும் மஸ்ஜிதிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளார்கள். இவை சஹீஹான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு முஸ்லிமல்லாதவர்கள் மஸ்ஜித்களுக்குள் நுழையும் அவசியம் ஏற்படின் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும்; உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு:

1. இதற்காக பொருத்தமான மஸ்ஜித்களை மாத்திரம் தெரிவு செய்தல்.

2. மஸ்ஜித் வளாகத்தில் இதற்கென்று பிரத்தியேக இடமொன்றை ஓழுங்கு செய்து கொள்வதும் பொருத்தமாகும்.

3. ஏகத்துவம் பகிரங்கப்படுத்தப்படும் இடமாகிய மஸ்ஜிதில் இணைவைத்தலுடன் சம்பந்தமான எந்தக் காரியமும் நிகழா வண்ணம் ஏலவே உத்தரவாதப்படுத்திக்கொள்ளல்.

4. மஸ்ஜிதைத் தரிசிக்க வருவோருக்கு மஸ்ஜிதின் மகத்துவம் மற்றும் ஒழுங்கு முறைகள் பற்றிய தெளிவொன்றை ஆரம்பத்திலேயே வழங்குதல்.

5. ஆண், பெண் இருபாலாரினதும் ஆடைகள் ஒழுக்கமான முறையில் இருத்தல்.

6. மஸ்ஜிதில் நுழைய விரும்பும் பெண்களுக்கு பிரத்தியேக ஆடையொன்றை ஏற்பாடு செய்தல்.

7. பாதணிகளுடன் மஸ்ஜிதிற்குள் நுழைவதை அனுமதிக்காதிருத்தல்.

8. போதையுடன் இல்லாதிருத்தல்.

9. எக்காரணம் கொண்டும் தொழுகை மற்றும் ஜுமுஆ போன்ற வழிபாடுகளுக்கு இடையூறு இல்லாததாக இருத்தல்.

10. றமழானுடைய மாதத்தில் இப்தாருடைய நேரத்தில்; அவர்களை அழைக்கும் பொழுது இப்தாருடன் சம்பந்தப்பட்ட வணக்கங்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், அந்நேரங்களில் அவர்களை அழைப்பதை முற்றாகத் தவிர்த்;துக் கொள்ளல்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.