எமது ஊரில் இஸ்லாமிய முறைப்படி பிறந்துஇ வளர்ந்துஇ வாழ்ந்து வந்த சில ஆண்களும் பெண்களும் மணம் முடித்தவர்களும், முடிக்காதவர்களும் மாற்றுமதத்தினருடன் ஓடிச் சென்று வாழ்க்கை நடத்திவருகின்றனர். இப்படி செல்பவர்கள் மணம் முடிக்காதவர்களாக இருந்தால் பள்ளி நிர்வாகிகள் என்ற அடிப்படையில் நாம் தேவையான விடயங்களை செய்வதோடு அவர்களது நிக்காஹ்வையும் செய்து வைக்கின்றோம். இருப்பினும் சிலர் இஸ்லாமியர்களைத் திருமணம் செய்து பெரிய பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் கூட மாற்றுமதத்தவர்களுடன் சென்று வாழ்ந்து வருகின்றனர்.

இன்னும் சிலரோ இஸ்லாமிய முறைப்படி அந்நியர்களை மணம் முடித்து எமது ஊரில் பல வருடங்கள் வாழ்ந்து விட்டு, பிள்ளைகளும் பெரியவர்களான பிறகு தங்களது கணவர்மாரின் வற்புறுத்தலின் பெயரில் அவரது ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டு மாற்றுமதக் கொள்கையிலேயே வாழ்கின்றனர். இது ஊர் மக்கள் நேரில் கண்ட உண்மையாகும். நாம் பல வழிகளில் இவர்களுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து தஃவா கொடுத்துள்ளோம். இருந்தாலும் இவர்களின் நிலை மாறாமலேயே உள்ளது.

இது விடயம் தொடர்பாக நமது ஊர் மக்களுக்கு எழுந்துள்ள மார்க்கப் பிரச்சினையானது இதே நிலையில் இவர்கள் மரணித்தால் இவர்களது ஜனாஸாவை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதா? அல்லது மாற்றுமத முறைப்படி அடக்கம் செய்வதா? என்பதேயாகும். இவர்களது வாழ்க்கை மாற்றுமத முறைப்படியும் ஜனாஸா நல்லடக்கம் இஸ்லாமிய முறைப்படியும் அமைவது சரியா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

 

நாம் இது விடயமாக பல உலமாக்களை அணுகி பல கருத்தபிப்பிராயங்களைப் பெற்றுக் கொண்டபோதிலும் அவை வெறும் பதிலாக மாத்திரம் காணப்படுவதாகவும் அதுபற்றி ஏகோபித்த முடிவொன்றும் இல்லாதபடியாலும் ஊர் மக்கள் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.

எனவே மேற்குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பான தெளிவானதோர் மார்க்கத் தீர்ப்பை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டுவருகின்றோம்.

 

எனவே, இது தொடர்பான கலந்துரையாடலை உங்கள் பத்வாக் குழுவில் முன்வைத்து இப்பிரச்சினைக்கான மார்க்கத் தீர்ப்பை எழுத்துருவில் அல்லாஹ்வுக்காக அனுப்பி வைக்குமாறு பள்ளி நிர்வாகிகளான நாம் கேட்டுக்கொள்கின்றோம். 

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

திருமணம் என்பது ஒரு முஸ்லிமான ஆண் ஒரு முஸ்லிமான பெண்ணை வலீ, சாட்சி, மற்றும் மஹ்ர் மூலம் தாம்பத்திய வாழ்விற்கு ஹலாலான பெண்ணாக ஆக்கிக் கொள்வதாகும்.

பொதுவாக முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது, அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வது போன்ற விடயங்களை இஸ்லாம் தாராளமாக அனுமதித்தாலும், ஒரு முஸ்லிமான பெண் அல்லது ஆண் முஸ்லிமல்லாத ஓர் ஆணை அல்லது (யூத, கிறிஸ்தவப்) பெண்கள் அல்லாத பெண்ணைத் திருமணம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.

அவ்வாறு திருமணம் செய்;தால் அது இஸ்லாத்தின் பார்வையில் செல்லுபடியற்றதாகவே கருதப்படும். அவ்வாறு திருமணம் செய்வது ஹராம் என்று தெரிந்தும், அதை தன்மீது ஹலாலாக்கி திருமணம் செய்து கொண்டால் அப்பொழுது அவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கியவராக கருதப்படுவார். அதே வேளை அவ்வாறு செய்வது ஹராம் என்று தெரிந்து கொண்டே திருமணம் செய்;து உடலுறவு கொண்டால் அது விபச்சாரமாகவே கருதப்படும்.

என்றாலும், மாற்றப்பட (அல்-குர்ஆன் இறங்க) முன்னுள்ள, திரிபு படுத்தப்படாத, உண்மையாக இருக்கும் நிலையில் இருந்த, தௌராத் அல்லது இன்ஜீலைப் பின்பற்றும் வேதக்கார பரம்பரையைச் சேர்ந்த (யூத, கிறிஸ்தவப்) பெண்களை இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் செய்வதற்கு அனுமதியுண்டு.

அவ்வாறு, மாற்றப்பட (அல்-குர்ஆன் இறங்க) முன்னுள்ள, திரிபு படுத்தப்படாத, உண்மையாக இருக்கும் நிலையில் இருந்த, தௌராத் அல்லது இன்ஜீலைப் பின்பற்றும் வேதக்கார பரம்பரையைச் சேர்ந்தவர் எனும் விடயத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அல்லது அப்பரம்பரையைச் சார்ந்த பெண் அல்ல என்பது உறுதியாகத் தெரிந்தால் அப்பெண்ணைத் திருமணம் செய்வது ஹராமாகும்.

முஸ்லிம் அல்லாத ஒருவரை, ஒரு முஸ்லிமான ஆண் அல்லது பெண் திருமணம் செய்து, அதே நிலையில் மரணித்தால் அவர் செய்த இச்செயல் பெரும்பாவமாக இருந்தாலும், அவர்  இஸ்லாத்தை  விட்டும் நீங்கியவராகக் கணிக்கப்படமாட்டார். எனவே, அவருக்கு ஒரு முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டிய அனைத்துக்  கடமைகளையும் செய்வது அவசியமாகும்.

என்றாலும், குறிப்பிட்;ட நபர் இஸ்லாத்தை விட்டும் நீங்கியது உறுதியாகத் தெரிந்தால், அப்போது ஒரு முஸ்லிம் மரணித்தால் செய்ய வேண்டிய கடமைகளை அவருக்கு செய்வதோ, முஸ்லிம் மையவாடியில் அவரை அடக்கம் செய்வதோ கூடாது.

எதிர் காலத்தில் இத்தகைய திருமணங்கள் நடைபெறாமல் இருப்பதற்குத் தேவையான ஆக்கபூர்வமான அறிவுரைகளையும் மார்க்கத் தெளிவுகளையும் பொதுமக்களுக்கு வழங்குவது ஆலிம்களதும் சமூக நலன்விரும்பிகளதும் கடமையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு