ஆண் பெண் கலந்த விஞ்ஞான வகுப்பை ஆரம்பித்தல்

பெண்கள் கல்வி கற்பதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. எனினும் ஆண், பெண் இரு பாலாரும் கலந்து திரைகள் இன்றி ஓரிடத்தில் கற்கும் சூழலை இஸ்லாமிய ஷரீஆ அனுமதிக்கவில்லை. ஏனெனில் இரு பாலார் கலப்பினால் பல தீமைகளும், விபரீதங்களும் ஏற்படுகின்றன. இதனை இன்றைய மேற்குலகின் நடப்புகள் உறுதி செய்கின்றன. தீமைகளும், ஒழுக்கவீனச் செயல்களும் சிறு பருவத்தில் இருந்தே தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தீமைகள் நடைபெறலாம் என்று கருதப்படும் அவற்றின் வழிகளை அடைத்தல் என்பதும் கடமையாகும். இதன்  காரணமாகவே பத்து வயதுச் சிறுவர்களைக் கூட படுக்கையில் பிரித்து வைக்குமாறு ஷரீஆ கட்டாயப் படுத்துகின்றது. இதனைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது:

'உங்கள் பிள்ளைகளை அவர்கள் ஏழு வயதினர்களாக இருக்கும் போது தொழுகையைக் கொண்டு ஏவுங்கள். அவர்கள் பத்து வயதினர்களாக இருக்கும் போது அதற்காக அவர்களை அடியுங்கள். படுக்கைகளில் அவர்களுக்கிடையில் பிரித்துவையுங்கள்' என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.  (நூல்: ஸுனனு அபீ தாவூத் - ஹதீஸ் எண் : 495)

எதிர் பாலாரின் பார்வைகள் கூட கலக்கக் கூடாது. இதுவும் தீமைக்கு வழி வகுக்கும் என்பது இஸ்லாத்தில் ஒரு பொது விதியாகும். இதனைப் பின்வரும் அல்-குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகின்றது:

'(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிக் காத்துக் கொள்ளவும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்.'  (அல்-நூர் : 30)

மஸ்ஜித்கள், வணக்கங்களின் போது கூட இது விடயத்தில் நபித் தோழர்களின் பெண்கள் மிகவும் பேணுதலுடனும், கவனத்துடனும் செயற்பட்டுள்ளனர். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது:

'நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவார்கள். முஃமினான பெண்களும் அவர்களுடன் தொழுகையில் கலந்து கொள்வார்கள். அப்பெண்கள் தங்களது ஆடைகளால் தங்கள் மேனிகளை முழுமையாக மறைத்துப் போர்த்திக் கொண்டு வருவதனால் அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களை யாரும் அறியமாட்டார்கள்' என்று ஆயிஷh (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.  (நூல்: சஹீஹுல் புகாரி - ஹதீஸ் எண் : 365)

எனவே, எதிர் பால் கலப்புடன் கல்வி கற்பதற்கோ, கற்றுக் கொடுப்பதற்கோ ஷரீஆவில் அனுமதி கிடையாது.