2016.05.18 ஆம் திகதி இருவருக்கு மத்தியில் திருமணம் நடைபெற்று பின்னர் 28.07.2016 ஆம் திகதி மூன்று தலாக்கின் மூலமாக விவாகரத்து நடைபெற்றது. விவாகரத்து நடந்து ஆறு மாத காலமாகியும் அப்பெண் மூன்று தலாக்கிற்குரிய இத்தாவை நிறைவேற்றவில்லை.

 

எனவே இந்தப் பெண் இப்பொழுது கட்டாயம் இத்தா இருக்க வேண்டுமா? மேலும் இப்பெண்ணுக்கு வேறொரு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருமணத்தை எவ்வாறு நிறைவேற்றுவது. மூன்று தலாக்கிற்குரிய இத்தாவை நிறைவேற்றியதன் பின்புதான் திருமணம் முடித்துவைக்க வேண்டுமா? அல்லது இத்தாவை முடிக்காமலும் திருமணம் முடித்துவைக்கலாமா

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

இத்தா என்பது ஒரு பெண் தனது கணவனின் மரணத்திலிருந்து அல்லது தலாக், குல்உ, பஸ்கு மூலம் கணவனைப் பிரிந்ததிலிருந்து மறுமணம் செய்யாமல் சில காலங்களுக்குக் காத்திருக்கும் ஒரு செயலாகும்.  

தாம்பத்திய உறவின் பின், தலாக், குல்உ மற்றும் பஸ்கு ஆகிய ஏதாவது ஒன்றின் மூலம் கணவனை பிரியும் ஒரு பெண் மாதவிடாய் ஏற்படக்கூடியவளாக இருந்தால் மூன்று சுத்தங்கள் முடியும் வரையுள்ள காலம் இத்தாவுடைய காலமாகும்.

இந்தவகையில் ஒரு பெண் துப்பரவு காலத்தில்; மேற்கூறப்பட்ட ஏதாவதொரு முறையில் பிரிந்தால், அந்தத் துப்பரவு காலத்துடன் சேர்த்து அடுத்து வரும் இரண்டு துப்பரவு காலங்கள் நிறைவடைந்ததும் இத்தாவுடைய காலம் முடிந்து விடும். அதேவேளை மாதவிடாய் காலத்தில் பிரிந்தால் தொடர்ந்து மூன்று சுத்தங்கள் பூர்த்தியானதும் இத்தாவுடைய காலம் முடிந்து விடும்.

மாதவிடாயை விட்டும் நம்பிக்கையை இழந்த வயதை அடைந்த பெண், மற்றும் இதுவரையில் மாதவிடாய் ஏற்படாத பெண்ணின் இத்தாக் காலம் மூன்று சந்திர மாதங்களாகும். மேலும், கணவனை இழந்த பெண்ணின் இத்தாவுடைய காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களுமாகும்.

ஒரு பெண் - எந்தவகை இத்தா கடமையை அனுஷ்டிப்பவளாக இருந்தாலும் சரி - அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். 

உங்களது கடிதத்தில் மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண் ஆறு மாதங்களாகியும் இத்தா இருக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். மேற்குறிப்பிடப்பட்ட பிரகாரம் குறித்த பெண்ணின் இத்தாவுடைய காலம் முடிந்திருந்தால், அந்தப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்க முடியும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.