நாடளாவிய ரீதியில் பள்ளி வாசல்கள் குர்ஆன் மத்ரஸாக்கள் அரபுக் கல்லூரிகள் போன்றவற்றிற்கு பணம் வசூல் செய்யும் வேலையில்  ஈடுபடுவோருக்கு சில இடங்களில் நூற்றுக்கு இவ்வளவு என்ற விகித அமைப்பிலும் கமிஷன் அடிப்படையிலும் கூலி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு தொழிலுக்கான சம்பளம் அல்லது கூலி நிச்சயிக்கப்படாத அறியப்படாத ஒன்றாக இருப்பதால் விகித அடிப்படையில் கமிஷனாகக் கொடுக்கப்படும் கொடுப்பனவு பிழையானதாக உள்ளது. அதில் சரியான நடைமுறை எது? ஷரீஆவின் பார்வையில் அதற்கான தீர்வு என்ன?  

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஒருவரை குறிப்பிட்ட ஒரு வேலைக்கு கூலிக்கு அமர்த்துவதாயின் அவர் செய்ய  வேண்டிய வேலையையும்; அதற்கான கூலியையும் அவரை கூலிக்கு அமர்த்தும் நேரத்தில் அறிவித்து அதை அவர் ஏற்;றிருத்தல் வேண்டும்.

மஸ்ஜித், குர்ஆன் மத்ரஸா, அரபுக் கல்லூரி மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் தேவைகளுக்கு பணம் வசூலிப்பதற்காக ஒருவரை கூலிக்கு அமர்த்தினால் அவர் செய்யும் வேலை மற்றும் அதற்கான கூலியையும் அவருக்கு தெரிவித்தல் வேண்டும்.

கூலிக்கு அமர்த்தும் நேரத்தில் வேலையையும் கூலியையும் குறிப்பிடுவது அவசியம் என்பதால் வசூலிக்கும் பணத்திலிருந்து வீத அடிப்படையில் கூலியை தீர்மானிப்பது கூடாது. ஏனெனில், அவர் எவ்வளவு பணம் வசூலிப்பார் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சில நேரம்  கூடுதலாகவும் இன்னும் சில நேரம் குறைவாகவும் வசூலிக்கலாம். இதனால் அவரது கூலி எவ்வளவு என்பதை ஒப்பந்த நேரத்தில் நிர்ணயிக்க முடியாது. 

மேலும், சிலவேளை முழு நாளும் வசூலிப்பதில் ஈடுபட்டாலும் பணம் ஏதும் கிடைக்காமல் போகக்கூடும். அல்லது சிலவேளை கூடுதலாகவும் கிடைக்கலாம். பணம் ஏதும் கிடைக்காதபோது அவர் வேலை செய்தும் அவருக்குரிய கூலி கிடைக்காமற் போய்விடும். அதிகமாக பணம் வசூலிக்கப்படும் நேரத்தில் இவ்வேலைக்கு சாதாரணமாக ஒருவருக்குக் கொடுக்கப்படும் கூலியை விடவும் அதிகமாகவும் கிடைக்கலாம்.

எனவே ஒரு வேலைக்காக ஒருவரைக் கூலிக்கு அமர்த்தும் பொழுது அவரது சம்பளம் எவ்வளவு என்பதை ஒப்பந்தத்தில் நிர்ணயித்தல் வேண்டும்.

மேலும் அவர்களை ஊக்குவிப்பதற்காக அவ்வப்போது குறிப்பிட்ட ஒரு தொகைப் பணத்தைக் கொடுக்கலாம். இத்தொகை ஒரே அளவாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

அதேபோன்று,  வசூல் செய்தவருக்கு கூலி கொடுக்கும் பொழுது வசூல் செய்யப்படாத வேறு பணங்கள் மூலமாக அல்லது வசூல் செய்யப்பட்ட பணத்தையும் வேறு பணத்தையும் கலந்ததன் பின்பு அவருக்கான கூலியைக் கொடுத்தல் வேண்டும். ஏனெனில், தான் வசூலிக்கிம் அதே பணத்திலிருந்து கூலி கொடுப்பது கூடாது என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு