ACJU/FTW/2022/03-446
1443.07.19
2022.02.21
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களது சேவைகளை பொருந்திக் கொள்வானாக!
பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
இஸ்லாமிய வரையறைகளைப் பேணி செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டு. இதற்கு பின்வரும் ஹதீஸை மார்க்க அறிஞர்கள் சான்றாக கூறுகின்றனர்.
عن أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لأَخٍ لِي صَغِيرٍ ' يَا أَبَا عُمَيْرٍ مَا فَعَلَ النُّغَيْرُ ' (صحيح البخاري : 6129)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவுக்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம், 'அபூஉமைரே! பாடும் உனது சின்னக் குருவி (புள்புள்) என்னாயிற்று?' என்றுகூடக் கேட்பார்கள் என அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 6129)
செல்லப்பிராணிகளில் ஒன்றான பூனைகளை வாங்குதல், விற்றல் தொடர்பாக வந்துள்ள பின்வரும் ஹதீஸும் இவ்விடத்தில் கவனத்திற்கொள்ளத்தக்கது.
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّه رضي الله عنه : 'أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ '(سنن أبي داود : 3479)
'பூனை மற்றும் நாயை விற்று அவற்றின் பெறுமதியை எடுப்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள் என ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸுனன் அபூதாவூத் : 3479)
மேற்குறித்த ஹதீஸிற்கு இமாம் நவவி றஹிமஹுல்லாஹ் போன்றோர் 'வீட்டுப் பூனைகளை விற்பதும் வாங்குவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்றும் இந்த ஹதீஸில் வந்துள்ள தடை காட்டுப் பூனைகளை விற்பனை செய்வது பற்றியதாகும்' என்பதுடன் இத்தடை மக்ரூஹ் உடைய வகையைச் சேர்ந்ததேயன்றி தடுக்கப்பட்ட (ஹராமான) வகையைச் சேர்ந்தல்ல என்றும் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், நபித்தோழர்களில் ஒருவரான அபூ ஹுறைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பூனையை செல்லப்பிராணியாக வளர்க்ககூடியவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்;கள் பூனையின் தந்தை என செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்கள்.
அத்துடன் பூனையைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அவர்கள் பூனை சுத்தமான மிருகமாகும் என்பதுடன் அது உங்களுடன் சுற்றித்திரியக்கூடியதுமாகும் என்று பதிலளித்தார்கள்.
இருப்பினும், இவ்வாறான விலையுயர்ந்த பூனைகள் மற்றும் ஏனைய வளர்ப்பு மிருகங்களை வாங்குதல், விற்றல் மற்றும் அவற்றை வளர்த்தல் போன்றவகைள் இம்மைக்கும் மறுமைக்கும் பயன்தரக்கூடியதாகவும் நற்கூலியை பெற்றுத்தரக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும் எனவும் அவற்றில்; வீண்விரயம், வீண்சிரமம், பெருமை மற்றும் ஆடம்பரம் போன்ற மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட விடயங்கள் ஏற்படாமல் இருத்தல் வேண்டும் எனவும் இஸ்லாம் வலியுருத்தியுள்ளது.
இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ '' الْخَيْلُ لِثَلاَثَةٍ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سِتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي لَهُ أَجْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ مِنَ الْمَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَتْ لَهُ حَسَنَاتٍ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ كَانَتْ أَرْوَاثُهَا وَآثَارُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ يَسْقِيَهَا كَانَ ذَلِكَ حَسَنَاتٍ لَهُ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِئَاءً وَنِوَاءً لأَهْلِ الإِسْلاَمِ فَهْىَ وِزْرٌ عَلَى ذَلِكَ ''. (صحيح البخاري : 2860 )
'குதிரை மூவருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தரும்). ஒருவருக்கு நற்கூலியாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகப் பசுமையான புல்வெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் (அதற்கு நோவினை ஏற்படாத வகையில்) கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை தன்னைக் கட்டிவைத்திருக்கும் கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவுக்குப் பசும்புல் வெளிகளில் அல்லது தோட்டங்களில் மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நற்பலன்கள் கிடைக்கும். அது தன் கயிற்றைத் துண்டித்துக்கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால் அதனுடைய (குளம்பின்) சுவடுகள் அளவுக்கும் அதன் விட்டைகளின் அளவுக்கும் அவருக்கு நற்பலன்கள் கிடைக்கும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருடைய நன்மைகளாக அமையும்.
குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், அதைப் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமையைப் பாராட்டுவதற்காகவும் கட்டி வைத்துப் பராமரிக்கும் மனிதனாவான். அது அவனுக்குப் பாவச் சுமையாகும் என அல்லாஹ்வின் தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரி : 2860)
மிருகங்களை மார்க்க சட்டங்களையும், வரையரைகளையும் கவனத்திற்கொண்டு வேட்டையாடுதல், பிரயாணம் செய்தல், செல்லப்பிராணிகளாக வளர்த்தல் போன்ற பல்வேறு விடயங்களில் பயன்படுத்த அனுமதியுள்ளது என்பது மேற்குறித்த ஹதீஸிலிருந்தும் அதுபோன்று மேலும் பல ஹதீஸ்களிலிருந்தும் தெளிவாகின்றது.
எனவே, வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படக்கூடிய பூனைகளை விற்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டு. எனினும், விலையுயர்ந்த பூனைகளை வாங்குதல், விற்றல் மற்றும் அவற்றை வளர்த்தல் போன்றவகைளில் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட வீண்விரயங்கள், ஆடம்பரங்கள் எற்படுதல் மற்றும் அவற்றிற்காக செலவுகள் செய்யும் போது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்டுள்ள ஏனைய முக்கிய கடமைகள், பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு தடையாக இருத்தல் போன்றவைகள் ஏற்படுமாயின் இது தடுக்கப்பட்டதாக ஆகிவிடும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஐ. எல். எம். ஹாஷிம் சூரி
மேற்பார்வையாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி (முஃப்தி)
தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா